இயக்குனர் அட்லிக்கும், சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்… திமுக உறுப்பினர் பேச்சுக்கு அமைச்சர் பதில்!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (18-06-2026) ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் மீதான வாதம் நடைபெற்றது. அப்போது இந்த விவாதத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கரன், ‘முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்த இயக்குனர் அட்லி பழைய படங்களிலிருந்து காட்சிகளை வெட்டி
புதிய படத்தில் ஒட்டி ஹிட் படங்கள் கொடுப்பார்.
அதுபோல ஆளுநர் உரையும் பழைய விஷயங்களை, வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஆளுநர் உரை தயாரித்திருக்கிறார்கள். தவெக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆளுநர் உரை காட்டுகிறது’ எனப் பேசினார்.
அதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், காலமும் காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது. அன்றும், இன்றும், என்றும் மாநில உரிமை மற்றும் மொழி உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். நேற்று மத்திய அரசின் சுற்றறிக்கை மீறி தமிழுக்கு தான் முதலிடம் கொடுத்தோம். தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு என்பதில் உறுதியாக உள்ளோம். தமிழ்த் திரையுலகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர். ஆனால் முழு அரசியல்வாதியான சிவசங்கர் அட்லியை குறித்து பேசியது aஆச்சரியமாக உள்ளது. அட்லிக்கும், சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம்? என்றார். தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் சிவசங்கர், இயக்குனர் அட்லியையும் பாலோ செய்கிறேன். உங்களையும் பாலோ செய்கிறேன். இன்னும் பல சுவையான செய்திகளை வரும் நாட்களில் ஆளுங்கட்சியினருக்கு சொல்வேன்.
ஆக்கபூர்வமான ஆட்சியை வழங்கும் பணியை மட்டும் பாருங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comments are closed.