Rock Fort Times
Online News

காதலியை கொன்று விட்டு காதலன் தற்கொலை: அறையில் நடந்தது என்ன?- பரபரப்பு தகவல்கள்..!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பவ்யா (வயது 21). சென்னையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கிப் பயின்று வந்தார். அப்போது அவருக்கும், சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் ( 21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
ஆனால், இந்த காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பவ்யாவின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பவ்யா, பாரதி பெருமாளிடம் நாம் ஒன்று சேர முடியாது எனக்கூறி விட்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றுள்ளார். பின்னர் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் பவ்யா, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான பின்னும் தனது முன்னாள் காதலரான பாரதி பெருமாளிடம் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் பவ்யாவை அவரது பெற்றோர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், நீண்ட நேரமாக செல்போன் எடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சென்னை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவல் துறையினர், பவ்யாவின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெரியமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்குச் சென்றனர். அதில் விடுதியின் அறை எண் 109-ல் பவ்யா மற்றும் பாரதி பெருமாள் இருவரும் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த அறைக்கு சென்ற காவல் துறையினர், கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பவ்யா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். பாரதி பெருமாள், தூக்கில் சடலமாக தொங்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்த பெரியமேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், “தான் காதலித்த பெண்ணுக்கு மற்றொரு நபருடன் நடந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத பாரதி பெருமாள், திருமணம் ஆனாலும் பரவாயில்லை, தன்னுடன் சேர்ந்து வாழ வந்து விடுமாறு தொடர்ந்து பவ்யாவை வற்புறுத்தியுள்ளார். அதற்கு பவ்யா மறுப்பு தெரிவித்ததால் பாரதி பெருமாளுக்கு கோபம் அதிகரித்துள்ளது. காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அத்துடன் அறையில் இருந்த கத்தி மற்றும் தடயங்களைச் சேகரித்த காவல் துறையினர், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்