தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்குப்பதிவிற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், ஒரு சில தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரி வழங்கி வருவதாக அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியதுடன், தேர்தல் ஆணையத்தில் அதுதொடர்பாக புகார் அளித்துள்ளது. அந்தப் புகார் மனுவில், தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள மாதிரி கூப்பன்களை சட்டவிரோதமாக வழங்கி வருகின்றனர். இது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமீறலாகும். தி.மு.க.வினர் தேர்தலில் குறுக்கு வழியில் வாக்குகளை பெறும் நோக்கில், தேர்தலுக்கு முன்பாகவே ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை சீரியல் நம்பர்களுடன் வாக்காளர்களுக்கு டோக்கன்களாக வழங்கி வருவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மட்டுமின்றி சட்டவிரோதமானதாகும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்து, இதுவரை வழங்கப்பட்ட கூப்பன்களை பறிமுதல் செய்து நேர்மையாக தேர்தலை நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு திமுகவினர், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி சான்றிதழ் பெற்றுள்ளோம் என்று தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்கையில், தேர்தல் ஆணையம் வழங்கிய அந்த சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக வழங்கப்பட்டதாகும். அச்சிடப்பட்ட பிரசுரங்கள் பயன்படுத்துவதற்கு இது பொருந்தாது. ஆகவே, ரூ.8000 கூப்பன் மாதிரி வழங்க அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.