Rock Fort Times
Online News

முறைகேடான ” கிட்னி ஆபரேஷன் ” விவகாரம் ! அவதூறுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்க தயார்…* திமுக வேட்பாளர் கதிரவன் வீடியோ வெளியீடு!

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராக எஸ்.கதிரவன் போட்டியிடுகிறார். இவருக்கு சொந்தமான திருச்சி மற்றும் பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முறைகேடான கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மண்ணச்சநல்லூர் தொகுதியில் இவருக்கு எதிராக களம் காணும் வேட்பாளர்கள் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி வேட்பாளரான கதிரவனுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எம்எல்ஏ கதிரவன், எனக்கு சொந்தமான மருத்துவமனையில் பணக்காரர்கள் யாரும் அறுவை சிகிச்சைக்கு வருவதில்லை. வருபவர்கள் எல்லாரும் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தை சார்ந்தவர்கள் தான். அவர்களுக்கு சேவை செய்யவே நான் மருத்துவமனையை நடத்தி வருகிறேன். கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் எனது மருத்துவமனை எந்த விதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. இது தொடர்பான ஆதாரங்களுடன் பொதுவெளியில் நான் விளக்கம் அளிக்க இருக்கிறேன் என பேசியுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் பேசும்போது, கடந்த சில தினங்களாக மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திமுகவினர் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்தகைய கட்சியினரின் வழக்கு செலவு முழுவதும் தானே ஏற்பதாகவும், அவர்கள் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை ஈடுசெய்ய உதவித் தொகையாக மாதம் தோறும் ரூ.20 ஆயிரத்தை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்