Rock Fort Times
Online News

அமைதி-வளம்-வளர்ச்சி! அதிமுக கொள்கைகளை கையில் எடுத்த திமுக வேட்பாளர் மண்ணச்சநல்லூர் கதிரவன் !

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் திமுகவிலிருந்து வெளியேறி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்கிற கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து, தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி காலம் வரை “திமுக எதிர்ப்பு” என்கிற அரசியல் அஸ்திரத்தையே அக்கட்சியினர் ஆணித்தரமாக பயன்படுத்தி வருகின்றனர். இது ரத்தத்தின் ரத்தமான கழக அதிமுக உடன்பிறப்புகளை திமுகவினரையும், கருப்பு-சிகப்பு கரை வேட்டியையும் கண்டாலே கடுகடுக்கும் அளவுக்கு இதை உறுதியாக உள்ளத்தில் பதிய வைத்திருந்தார் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இடையே 2011 சட்டமன்ற தேர்தல், அதன்பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து 2016ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்து, மறைந்த ஜெ.ஜெயலலிதா திமுகவை எதிர்த்து களம் காண, அமைதி – வளம் – வளர்ச்சி – என்கிற தாரக மந்திரத்தையே தேர்தல் களத்தில் மந்திரமாக முழங்கினார். இந்நிலையில் அமைதி – வளம் – வளர்ச்சி என்கிற அதிமுகவின் முதன்மையான கொள்கையை கையிலெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக களம் காணும் கதிரவன் எம்.எல்.ஏ. நேற்றைய தினமான ஏப்ரல் 3ம் தேதி மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட சீதேவிமங்கலம், பெரகம்பி, எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், திருப்பட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினர் படைசூழ வாக்கு சேகரிக்க சென்றபோது கூட, நமக்கு அடிதடி அரசியல் வேண்டாம். பகட்டு அரசியல் வேண்டாம். மக்களோடு மக்களாக பயணிப்போம். அவர்களுக்கு வேண்டியதை செய்வோம். பெண்களை மதிப்போம் என பேசினார். தொடர்ந்து அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார பதிவின் இறுதியில் கூட அமைதி- வளம் – வளர்ச்சி என்றே வெளியிடப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு கதிரவனுக்கான வாக்காக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்