Rock Fort Times
Online News

விஜய்க்கு பாதுகாப்பு கோரி பதவியில் இல்லாத உள்துறை செயலாளருக்கு தவெக கடிதம்..!

கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கையுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒரே நாளில் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், பெரம்பூர், கொளத்தூரில் மட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பின்னர் வில்லிவாக்கத்தில் விஜய் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது உரிய பாதுகாப்பை காவல் துறை அளிக்கவில்லை எனக் கூறி, தவெக நிர்வாகிகள், இதன் காரணமாக அவரது பிரச்சாரம் ரத்துச் செய்யப்படுவதாக தெரிவித்தனர். மேலும், விஜய் பிரச்சாரத்தில் பாதுகாப்புக் குறைப்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று (ஏப்ரல் 01) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், விஜய்க்கு “மத்திய உள்துறை அமைச்சகத்தால் ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்து கொளத்தூருக்கு சென்று கொண்டிருந்த விஜய்யின் வாகனம் பாதுகாப்பாகவும், தடையின்றியும் செல்வதை உறுதிச் செய்யும் வகையில் போதிய அளவில் காவல் துறையினர் அங்கு நியமிக்கப்படவில்லை. ஆகவே, விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன், ‘Y’ பிரிவு பாதுகாப்பில் உள்ள வழிகாட்டுதல்கள்படி முறையான பாதுகாப்பை வழங்க காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல மத்திய உள்துறை செயலாளருக்கும் அக்கட்சி நிர்வாகம் இன்று கடிதம் எழுதியிருந்தது. முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளரான அஜய் பல்லா, கடந்த 2025 -ம் ஆண்டு முதல் மணிப்பூர் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். அவர் கூடுதல் பொறுப்பாக நாகலாந்து மாநில ஆளுநராகவும் உள்ளார். ஆனால், தவெக நிர்வாகம் இன்று எழுதியுள்ள கடிதத்தில் ‘மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது. தற்போது மத்திய உள்துறை அமைச்சராக கோவிந்த் மோகன் என்பவர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்