Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் முதல்வர் ஜோசப் விஜய்… சாலை மார்க்கமாக கரூர் பயணம்..!

கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(ஜூலை 10) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பின்னர், சாலை மார்க்கமாக கரூர் செல்கிறார். கரூர் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு, க்யூர் கோடு அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாக முதல்வர் கரூர் வருவதால், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அட்லஸ் மைதானத்தைச் சுற்றி சுமார் 10 அடி உயர தற்காலிக தடுப்புகள் மற்றும் தகர வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கரூர் – சேலம் புறவழிச்சாலை, கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவர் சந்தை, திருமாநிலையூர், சுங்ககேட், தான்தோன்றிமலை உள்ளிட்ட வழித்தடங்களில் சாலை வழியாக பயணித்து, மாவட்ட ஆட்சியர் திட்ட வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகைக்கு முதல்வர் செல்கிறார். இதற்காக முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகலில் நடைபெறும் மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி ஊராட்சியில் ₹1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலை மூலம் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்குகிறார். முதல்வரின் பயணத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றங்களை கவனித்து பயணிக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்