லால்குடி தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததால் பரபரப்பு…!
‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் மன்சூர் அலிகான் அதிமுக மற்றும் திமுகவிடம் சீட் வாங்க முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு சீட் தர இரு கட்சிகளும் முன்வரவில்லை. இதையடுத்து, தனது கட்சி திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். லால்குடி சட்டசபை தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், பள்ளப்பட்டியில்தான் நான் வளர்ந்தேன். 2011-வது ஆண்டிலேயே நான் திருச்சியில் தனியாக போட்டியிட்டேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பாக இரு கட்சிகளிடம் சீட் கேட்டும் ஒதுக்கப்படவில்லை. ஆகவே லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்று கூறினார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக லால்குடி வந்த அவர், திடீரென கல்லக்குடி ரயில் நிலையத்தில் தலை வைத்து படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர்
மு. கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அதேபோலத்தான் நானும் இன்று( மார்ச் 31) தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். 10 முறை, 5 முறை வென்று பதவியில் இருப்பவர்களால் பொதுமக்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. எல்லாம் மாற்றப்பட வேண்டும். மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்போம்” என்று தெரிவித்தார்.

Comments are closed.