சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி திடலில் தவெக பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் இன்று(13-02-2026) நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் கூடியிருந்தனர். மதிய நேரத்தில் கூட்டம் நடைபெற்றதால் வெயிலால் பலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த சேலத்தில் உள்ள ஒரு வெள்ளி பட்டறையில் வேலை பார்க்கும் தொழிலாளியான சூரஜ் (37) என்பவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் மயங்கிய நிலையில், அவரை சக தொண்டர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் வழிலேயே உயிரிழந்தார் என கூறப்படுகிறது. மாரடைப்பு காரணமாக சூரஜ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், “இன்று தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால் மயங்கி உள்ளார். அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்க வில்லை. சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.