Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் கோலாகலம்- * ” ஓம் சக்தி பராசக்தி” கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…!

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இங்கு, சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா ஏப்ரல் 6ம் தேதி காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். அதேபோல, தினமும் இரவு 7 மணிக்கு மேல் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவின் 13ம் நாளான நேற்று (ஏப்ரல் 18) தெப்பத்தில் சமயபுரம் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்தில் எழுந்தருளிய மாரியம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் சக்தி பராசக்தி” பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். தெப்பத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஏப்ரல் 22 ம் தேதி சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்