இயேசுவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல், உயிர் விடுதல் போன்ற 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் இறைச்சி தவிர்த்து சைவ உணவு உண்ணுகின்றனர். மேலும் , இந்த நாட்களில் தங்களது இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட மாட்டாது. இந்த ஆண்டு தவக்கால நிகழ்வு கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி திருநீற்று புதனுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் ஜெபம், பிரார்த்தனை வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை ஆகியவை நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம்( ஏப்ரல் 13) ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. இயேசு துன்புற்று இறப்பதற்கு முன்னதாக கழுதை மேல் அமர்ந்து எருசலேம் நகருக்குள் நுழைந்த போது “ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்ற பெருக” என எருசலேம் மக்கள் ஓசன்னா… என்ற பாடல் பாடி ஆர்ப்பரிப்போடு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா…
பாடல்களை பாடி பவனியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் , கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள பூண்டி மாதா பேராலயம், திருச்சி, மேலப்புதூரில் உள்ள புனித மரியன்னை பேராலயம், மெயின் கார்ட்கேட் பகுதியில் உள்ள லூர்து அன்னை பேராலயம், பாலக்கரை உலக மீட்பர் பேராலயம், புத்தூர் பாத்திமா அன்னை பேராலயம், பொன்மலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம், கிராபட்டியில் உள்ள புனித தெரசாள் ஆலயம், ராமச்சந்திர நகரில் உள்ள குழந்தை இயேசு ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் திருப்பலி நடைபெற்றது. ஆண்டவர் இயேசு திருச்சிலுவையில் உயிர் நீத்த நாள் ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Comments are closed.