திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் 01.12.2024 ம் தேதி இரவு மண் சரிவு ஏற்பட்டது. அதோடு ராட்சத பாறை ஒன்று உருண்டு வந்து வீடுகளின் மீது விழுந்து அமுக்கியது. இதில், மண் சரிவில் 7 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 20 மணி நேரமாக போராடி மண் சரிவில் சிக்கி இருந்தவர்களை புல்டோசர் மூலம் மீட்டனர். ஆனால், அவர்கள் 7 பேரையும் சடலமாக தான் மீட்க முடிந்தது. ஒரே நேரத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் போனது துரதிருஷ்டவசமானது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.