Rock Fort Times
Online News

ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது-விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார், டூவீலர் பறிமுதல்…!

திருச்சி பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம், பொன்மலை பகுதியில் காவலர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதனை ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை சோதனையிட்ட போது, அவர் போதை மாத்திரைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 30) என தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனையில் 2038 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வினோத், ஆன்லைனில் மொத்தமாக போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் சில்லறையாக விற்பனை செய்து வந்ததும், அவருக்கு பொன்மலை அடிவாரப் பகுதியை சேர்ந்த ரோஹித் (20), கொட்டப்பட்டு சந்துரு ( 20) ஆகியோர் உதவியாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் போதை மாத்திரை விற்பனைக்கு பயன்படுத்திய கார், டூவீலர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்