திருச்சி, ஸ்ரீரங்கம் கீதாபுரம் எஸ்.பி.ஐ. காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாராயண ஷர்மா (42). இவர் ஸ்ரீரங்கத்தில் வேத பாடசாலை நடத்தி வருகிறார். இதில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜகோபால சாமி ( 19) என்ற மாணவன் பயின்று வந்தார். வழக்கமாக நாராயண சர்மா கும்பாபிஷேகம் நடைபெறும் கோவில்களுக்கு மாணவர்களை பயிற்சிக்காக அழைத்து செல்வாராம். அந்தவகையில் வையம்பட்டி அருகே உள்ள தட்டாரப்பட்டி பிரசன்ன வெங்கடேஸ்வரா கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு மாணவன் ராஜகோபால சாமியை அழைத்துச் சென்றார். அப்போது மாணவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாணவனை அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ராஜகோபாலசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாராயண சர்மா கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.