திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு…!( வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதனை 100 வார்டுகளாக உயர்த்த அருகாமையில் உள்ள சில ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சில ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான இன்றைய தினம்(09-09-2024) தாயனூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டரை சந்திக்க அனுமதி கேட்டனர். அப்போது காவல்துறையினர் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்க இயலும் என கூறினர்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர், மண்வெட்டியை தூக்கிப்பிடித்து வேண்டாம், வேண்டாம் தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பஸ் மற்றும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க ஒரு சிலரை அனுமதிக்கிறோம், மற்றவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி ஓரமாக செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுந்து ஓரமாக நின்றனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் ஊரில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். தாயனூர் கிராமம் முழுக்க, முழுக்க விவசாயம் சார்ந்தது. 75 சதவீத நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளது. தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் உரிமைகளும், சலுகைகளும் பறிபோகும் .100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்காது. பொதுமக்களுக்கு அதிக நிதி சுமை ஏற்படும் .ஆகவே தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் விருப்பப்பட்டு இணைந்தால் மட்டுமே இணையலாம். விருப்பம் இல்லை என்றால் எழுத்துப்பூர்வமாக இணையவில்லை எனக்கொடுத்தால் மாநகராட்சியுடன் அந்த ஊராட்சி இணைக்கப்படாது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.