Rock Fort Times
Online News

தூத்துக்குடியில் பயங்கரம்: தலை துண்டித்து நிலத் தரகர் படுகொலை…!

தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ்(60). இவர், வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். நில தரகர் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். அத்துடன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவர், டபிள்யூ.ஜி.சி ரோட்டில் உள்ள தொழிற்பேட்டையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். சிலசமயம் ஓய்விற்காக அங்குள்ள மர நிழலில் தூங்குவதும் வழக்கமாம். இந்நிலையில், மர நிழலில் தனியாக அமர்ந்திருந்தபோது பைக்கில் வந்த இரண்டு பேர், பால்ராஜை சரமாரியாக வெட்டியதுடன் தலையையும் துண்டித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தொழிற்பேட்டையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பால்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்தனர். அப்போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பால்ராஜ், உடலில் பல இடங்களில் வெட்டுபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் மத்திய பாகம் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில்  பால்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்ததில் ஒரே பைக்கில் இரண்டு இளைஞர்கள் வேகமாகச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் சங்கரப்பேரியைச் சேர்ந்த கந்த சுப்பிரமணியன், ஜெயராமன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், பால்ராஜுடன் சேர்ந்து நாங்களும் நிலத் தரகர் தொழில் செய்து வந்தோம். அத்துடன் பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்தோம்.
இந்நிலையில் பால்ராஜ், எங்களுக்கு தரவேண்டிய நில விற்பனை தரகு தொகையை தரவில்லை. அத்துடன் வட்டிக்கு கொடுத்த பணத்தையும் சரி வர வசூலித்து தரவில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் அவரிடம் பணம் கேட்பதற்காக சென்றோம். ஆனால், அவர் பணத்தை தர முடியாது என கூறினார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ,அவரை கொலை செய்தோம் என்றனர். இது ஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட இருவர் கைகளிலும் கட்டு போடப்பட்டது இருந்தது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இருவரையும் நாங்கள் சுற்றி வளைத்த போது பைக்கில் தப்ப முயன்றனர். அப்போது பைக்கில் இருந்த இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்