ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு: ‘பாஸ்’ இல்லை என்றாலும் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்…* போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு!
பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச ‘பஸ் பாஸ்’ வழங்கப்படும். வருகிற ஜூன் 4ம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால், தற்போது வரை பள்ளி மாணவர்களுக்கான பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்வதற்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளதாவது:-
“ஜூன் 4ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம். அரசு பள்ளி மாணவ, மாணவியர் சீருடையுடன் கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் பயணிக்கலாம். அதேபோல், அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், அரசு தொழில் பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவன அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் பயணிக்கலாம். பள்ளி துவங்கும் முதல் முடியும் நேரம் வரை அரசு பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. உரிய நிறுத்தங்களில் நிறுத்தி மாணவ, மாணவியரை ஏற்றி, இறக்க ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். புதிய பஸ் பாஸ் வழங்க அவகாசம் தேவைப்படும் நிலையில் மாணவர்கள் பயணிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.