நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்ல, கடந்த 25ம் தேதி தனது குடும்பத்துடன் அந்தச் சிறுவன் சென்னைக்கு வந்துள்ளார். பின்னர், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்த நிலையில், மறுநாளான மே 26 அன்று குடும்பத்துடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அனைவரும் ஊருக்கு புறப்பட தயாரான நிலையில், சிறுவன் மட்டும் இரண்டு நாட்கள் தங்கி இருந்து விட்டு வருவதாக கூறியுள்ளார். அதனை ஏற்று உறவினர்கள் அனைவரும் ஊருக்கு சென்ற நிலையில் சிறுவன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று சிறுவனின் மாமா தனது நண்பருடன் அந்த வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது சிறுவனின் மாமா அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் மாமாவின் நண்பர், சிறுவனை எழுப்பி, மீதம் இருந்த மதுவை அவரது வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்ததோடு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அந்த நபரை தாக்கி விட்டு, கதவை வெளியே பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி அசோக் நகர் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிறுவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவனுக்கு மதுவை கொடுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் போலீஸ் ஏட்டு வேலப்பன் (35) என்பது தெரிய வந்தது. அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் வேலப்பன், கடந்த 2013 ம் ஆண்டு ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணிக்கு சேர்ந்ததும், தற்போது வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டு வேலப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேலும் , வேலப்பன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, அவரை பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஐபிஎஸ் உத்தரவிட்டார். பாலியல் வழக்கில் போலீஸ் ஏட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.