திருச்சி பன்னாட்டு விமான நிலையம் ரூ.1200 கோடி செலவில் நவீன தொழில் நுட்பங்களுடனும், அதிநவீன வசதிகளுடனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா ஜனவரி 2ம் தேதி நடைபெறவுள்ளது. அதேபோல, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இதேநாளில் நடக்கிறது. இந்த விழாக்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விமான நிலைய புதிய முனையத்தையும், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியும் விழா பேருரை ஆற்றுகிறார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிடோரும் பங்கேற்கின்றனர்.

திருச்சிக்கு பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் (எஸ்பிஜி) முதல் குழு வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்துள்ளது. இதன்மூலம் வெள்ளிக்கிழமை இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் வருகையின்போது 5அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும். இதைப்போலவே பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மாவட்ட போலீசார் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 5 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.