திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூரில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். ஆனால், கொரோனா பெருந்தொற்று, கோவில் புனரமைப்பு பணி என கடந்த 6 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடத்திட அணியாப்பூர், வெள்ளாளபட்டி, தவளவீரன்பட்டி ஆகிய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் 3 ம் தேதியில் தொடங்கி நடைபெற்றது. இன்று(06-09-2023) பாடை வேஷம், படுகளம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவில், பக்தர்கள் குவிந்து ஒருவருக்கொருவர் தலையில் முட்டையால் அடிப்பது, துடைப்பத்தால் அடித்துக் கொள்வது, வீட்டில் உள்ள கிழிந்த பாயை எடுத்து வந்து அடித்துக் கொண்டனர். தொடர்ந்து, பாடை வேஷம் நடந்தது.

ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருக்கு எப்படி இறுதிச் சடங்கு செய்வார்களோ அதே போல் அணியாப்பூரைச் சேர்ந்த தங்கவேல் என்ற 78 வயது முதியவரை கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க அழைத்து வந்து இறுதி ஊர்வல ரதத்தில் வைத்து இறந்தவரை போல் அனைத்து காரியங்களும் செய்து கோடி எடுத்துப் போட்டு வீடு வரை உறவு என்ற பாடல் ஒழிக்க இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வல ரதத்திற்கு முன் அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ச்சியை வெளிபடுத்த அதற்கு முன் தங்களின் விருப்பம் போல் விதவிதமான வேடங்களை போட்டுக் கொண்டு பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் முன் சென்றனர்.

கோவில் அருகே உள்ள வளாகத்திற்கு சென்றதும் சிவன் – பார்வதி வேடமிட்ட இருவர் வந்து, இறந்ததாக கருதப்பட்டவரை விபூதி போட்டு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப, கோட்டை மாரியம்மன் கோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டனர். நேற்றி கடனை நிறைவேற்றும் பொருட்டு இந்த சம்பவம் நடைபெறுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். மற்றொரு அம்சமாக படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் முன்பு 4 பேர் படுத்திருக்க ஒப்பாரி வைத்து, தப்படித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின் அவர்கள் நள்ளிரவில் எழுப்பப்பட்டனர். துடைப்பத்தால் அடி, வண்ண வண்ண முகங்கள், சிறுசு முதல் பெரிசு வரை ஆட்டம், பாடையில் உயிருடன் உள்ளவரின் ஊர்வலம், படுகளத்தின் மகத்துவம் என எல்லாமே மெய்சிலிக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.