அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (18.08.2023) நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் எம். ராஜசேகர் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ். ராமலிங்கம் முன்மொழிந்தார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அவை தலைவர் எம்.துரைராஜ் வழிமொழிந்தார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், மாமன்ற உறுப்பினர் பி.செந்தில்நாதன் வரவேற்றார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், இதய தெய்வம் அம்மா தொழில் சங்கத்தின் இணை செயலாளர் கேவிடி. கலைச்செல்வன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், துணைப் பொதுச் செயலாளர், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எம். ரெங்கசாமி ஆகியோரும் பேசினர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமுமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
“2017ல் நாம் தேர்தலில் போட்டியிடும் போது கட்சியின் பெயரும் இல்லை, சின்னமும் இல்லை. அதிமுக பெயரை உபயோக படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அப்போது ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில் நின்ற என்னை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்து, தி.மு.கவை டெபாசிட் இழக்க செய்தீர்கள். எடப்பாடி பழனிசாமி ஒருமுறை சொல்கிறார், டி.டி.வி தினகரனை நான் ஒரு அரசியல்வாதியாகவே நினைப்பதில்லை என்று. அவரை பொறுத்தவரையும் அரசியல்வாதி என்றால் துரோகம் செய்ய வேண்டும், காலில் விழுந்து பதவி வாங்க வேண்டும், மீண்டும் துரோகம் செய்ய வேண்டும். அது எனக்கு தெரியாது. செந்தில் பாலாஜி அவசரப்பட்டார் இன்று அல்லல் படுகிறார். அமலாக்கத்துறை அவரை அழைத்து செல்வதை பார்த்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, என்னிடம் புதிய வேட்பாளரை கேட்டபோது கழக நிர்வாகிகளுடன் விசாரித்து நான் தான் செந்தில் பாலாஜியை பரிந்துரை செய்தேன். என்னால் பயன்பெற்ற 90 சதவீதம் பேர் இன்று எனக்கு எதிராக தான் உள்ளனர். தமிழ்நாட்டில் இளைஞர் பட்டாளம் அதிகம் உள்ள இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த விதத்திலும் ஸ்டாலின் சளைத்தவரல்ல. இருவருமே ஹிட்லர் உடன்பிறந்தவர்கள் போல் தான் உள்ளனர். ஜனநாயகம் வழியாக நாம் அ.தி.மு.க.வை மீட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அவை தலைவர் கோமக்குடி பி.ரவி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி வட்ட, கிளை நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருச்சி சங்கம் ஓட்டலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என போலியாக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து தான் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் நீட் தேர்வு இது நாள்வரை ரத்து செய்யப்படவில்லை. தற்போது தான் தமிழக மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். கர்நாடக அரசு காவிரி ஆற்றில் நீர் திறக்காததால் டெல்டா பகுதிகளில் குறுவை, சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது.
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ? அப்போதெல்லாம் கர்நாடகாவிற்கு தனி தைரியம் வந்து விடுகிறது. இதனால் தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய பங்கீட்டு நீர் கிடைக்காது. மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடாது. சசிகலா, தான் தான் பொதுச்செயலாளர் என நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். எனவே, இருவருடனும் தேர்தலில் இணைந்து பயணிக்க இயலாது. ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எதிராக போட்டி மாநாடு அமமுக நடத்தாது. ஆனால் தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.