திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலூரில் அய்யனார் மாநகராட்சி உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 240 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் இட வசதி கருதி இந்த பள்ளியை மேலூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தொிவித்து அப்பகுதி மக்கள் , பள்ளியை இடம் மாற்றம் செய்தால் மாணவா்கள் இங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் துாரம் ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்று கூறியும், இங்கேயே பள்ளி செயல்பட கோரியும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளி இடமாற்றம் செய்யப்படாது என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மாணவர்கள் வகுப்புக்கு திரும்பினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் :
பள்ளிக்குத் தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்ட ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறை இடம் தருவதாக தெரிவித்திருந்தது. ஆனால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு பள்ளிக்கூடத்தை இடம் மாற்றம் செய்வதிலேயே குறியாக உள்ளனர். தற்போது மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி இடமாற்றம் செய்யப்படாது என உறுதி அளித்துள்ளார். இதனால், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். மேலும் இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.