திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 46 கிலோ சுறா செதில்கள் பறிமுதல்: ரூ.6.80 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது…!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அங்கிருந்தும் திருச்சிக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு பயணிகளிடம் அதிக அளவு யூரோ மற்றும் சிங்கப்பூர் டாலர்கள் இருந்தன. அதேபோல அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது சிறிய சாக்கில் சுறாவின் செதில்களும் இருந்தது. வெளிநாட்டு பணம் மற்றும் சுறா செதில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சுறா செதில்களின் மொத்த எடை 46.580 கிலோ இருந்தது. வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.6.80 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுறா செதில்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள், எங்கு கொண்டு செல்ல அவர்கள் வைத்திருந்தார்கள் என்றும், வெளிநாட்டு பணம் எடுத்துச் சென்றது குறித்தும் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments are closed.