Rock Fort Times
Online News

4 லட்சம் ரேஷன் அட்டைகள் விரைவில் விநியோகம்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்..!

சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநிலம் முழுவதும் சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தகுதியான விண்ணப்பதாரர்களை முறையாகக் கண்டறிந்து, இந்த 4 லட்சம் புதிய ஸ்மார்ட் கார்டுகளையும் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் பயனாளிகளுக்கு விரைவாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் வெங்கடரமணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்குவதன் மூலம், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் விடுபட்ட தகுதியான குடும்பங்களுக்கும் முழுமையாகச் சென்றடையும் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் நியாயவிலைக் கடைகளுக்கு சரியான நேரத்தில் வழங்கப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய குடும்ப அட்டை தொடர்பான சேவைகளும், திருத்தப் பணிகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

அதே சமயம், முன்பு ஏதேனும் காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக திருமணமானவர்கள், முகவரி மாறியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சேர்க்க அல்லது நீக்க காத்திருப்பவர்கள் தங்களது ஆதார் அட்டை, முகவரிச் சான்று, எரிவாயு இணைப்பு விவரங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அவர்களின் கோரிக்கைகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்