Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூர் அருகே அரிவாளை வைத்து “கெத்து” காட்டிய ரவுடிகள் உட்பட 3 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் சிறையில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் ரவுடி சுந்தர்ராஜின் சகோதரர்களான ரவுடிகள் சின்னராஜ் ( 36 ),மாசிராஜா (27), அவர்களது உறவினர் மணிவண்ணன் (41) ஆகிய மூவரும் சர்க்கார்பாளையம் பகுதியில் தொடர்ந்து பிரச்சனை செய்து வருகின்றனராம். குறிப்பாக, சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்ட பின்னர், ரவுடிகள் மீதிருந்த பயம் போய்விட்டது எனக் கூறி, அப்பகுதி மக்களை அரிவாளைக் காட்டி அவ்வப்போது மிரட்டி வந்துள்ளனர். வழக்கம்போல சம்பவத்தன்றும் அரிவாளை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் மூவரும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்