” 24 மணி நேரம் தான் கெடு ” – கூண்டோட மாத்திடுவேன்! திருச்சி எஸ்.பியிடம் இருந்து திருவெறும்பூர் போலீசாருக்கு இடியாய் வந்த உத்தரவு !
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட குவளக்குடியில் கடந்த ஏப்ரல் மாதம் இரவு நேர ரோந்து பணியில் திருவெறும்பூர் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக ஆயுதங்களுடன் பைக்கில் வந்த மூன்று பேர், போலீசாரை கண்டதும் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பைக்கை மீட்டு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொண்டுவந்தனர். . இந்நிலையில் போலீசார் மீட்டு கொண்டுவந்த பைக் பைனான்ஸில் வாங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட பைக் உரிமையாளர்களிடம் பைக் குறித்து கேட்டதாகவும், அவர்கள் திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பைக் உள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீசாரிடம் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்தினர் பேசி வண்டியை எடுத்துச் சென்று விட்டனர். இந்நிலையில் திருவெறும்பூர் டிஎஸ்பியாக பொறுப்பேற்ற ஜாபர் சித்திக் பைல்களை பார்த்த பொழுது சம்பந்தப்பட்ட பைக் இங்கு இல்லை என்பதும், அந்த பைக் நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதும், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாததும் தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜாபர்சித்திக் இது குறித்து திருச்சி எஸ்.பி வருண் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய திருச்சி எஸ்பி வருண்குமார் யார் இந்த தவறை செய்தார்கள் என்பதை கேளுங்கள். 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட பைக் மற்றும் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் அனைவரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். இதையடுத்து திருவெறும்பூர் டி.எஸ்.பி ஜாபர் சித்திக் திருவெறும்பூர் காவல்நிலைய போலீசார் அனைவரையும் ஒன்று கூட்டி எஸ்.பியின் உத்தரவை கூறியுள்ளார். தொடர்ந்து டி.எஸ்.பி சாபர் சித்திக் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் எழுத்தர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு துவாக்குடி காவல் நிலைய போலீசாரை கொண்டு திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு பணிக்கு நியமித்தார். இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.