திருச்சி, உறையூர் ஹாஸ்டலில் ஒரே நேரத்தில் 15 செல்போன்கள் திருட்டு! கைவரிசையில் ஈடுபட்டவருக்கு போலீஸ் காப்பு!
திருச்சி,உறையூர் ராமலிங்க நகர் 1வது கிராஸில் தனியார் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடலூர் மாவட்டம் ஆலம்பாக்கம் சிந்தாமணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (வயது 29) என்பவர் தங்கி உள்ளார். இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம ஆசாமி உள்ளே புகுந்தான். பிறகு இவரது அறையில் வைத்திருந்த செல்போன் மற்றும் அங்கு தங்கியிருந்த 14 பேரின் செல்போனை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ராஜேஷ் கண்ணா தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி, புத்தூர் ஆப்பக்கார தெருவை சேர்ந்த ராஜா மாணிக்கம் மகன் மனோஜ் குமார் (வயது 19) என்பவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த வாலிபரை கைது செய்து அவர் திருடிய செல்போன்களை பறிமுதல் செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments are closed.