திருச்சியில் உள்ள பிரபல கல்லூரிகளில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(10-02-2024) திருச்சி வந்தார்.
இந்நிலையில் மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேறிய வலியுறுத்தியும், கம்யூனிஸ்ட் தலைவர்கள், பெரியார், வள்ளலார் மற்றும் காந்தியடிகள் குறித்து தவறாக விமர்சனம் செய்வதை கண்டித்தும் திருவானைக்காவல் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பிற அமைப்பினர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்புக் கொடி மற்றும் கட்சி கொடிகளுடன் நின்று கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் திடீரென்று சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக சி.பி.எம். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், மணிமாறன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, மோகன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, பகுதி செயலாளர்கள் தர்மா, சுரேஷ், வேலுச்சாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.