திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மேல தெருவை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ( வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் கூலிப்படையாகவும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 19ஆம் தேதி ஜெகன் தனது பிறந்தநாள் விழாவை திருச்சி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டி பெரிய அளவில் கொண்டாடினார். மேலும் சொந்த ஊரில் வான வேடிக்கை முழங்க கார் மீது அமர்ந்து ஊர்வலமாக சென்றார். பிறந்தநாள் விழாவில் ஜெகனுடன் தொடர்புடைய பல ரவுடிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பிறந்தநாள் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அவரது கூட்டாளிகள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதத்துடன் வந்து அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகன் மற்றும் அவனது கூட்டாளிகளான தஞ்சாவூர் இராவுசாபட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (28), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), மதன்குமார் (30), சத்யராஜ் (34), தஞ்சாவூர் இன்னத்துக்கான்பட்டியை சேர்ந்த ச திவாகர் (30), திருச்சி புத்தூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ஹரிஹரன் (25), மேட்டு தெரு புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (26), மேல சிந்தாமணி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (29), வடக்கு காட்டூர் பிரசாத் (32) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி சென்ற போது அந்த வாகனத்தின் கண்ணாடியில் ஜெகன் தலையில் மோதிக் கொண்டு ரகளை செய்தார். பின்னர் அவர்களை, போலீசார் திருச்சி 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பிரபல ரவுடி பிறந்த நாள் விருந்தில் ஆயுதங்களுடன் ரவுடிகள் கூடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.