கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்சியம் (வயது 60). இவர் தினந்தோறும் லாலாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள வாழைத்தோப்புக்கு ஆடு, மாடுகளுக்காக புல் அறுப்பதற்காக செல்வார். நேற்று வழக்கம்போல் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், மூதாட்டி மூக்கில் இருந்த ஒரு கிராம் தங்க மூக்குத்தியை அறுத்து எடுத்து விட்டு அருகிலுள்ள முட்புதரில் உடலை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். நீண்ட நேரம் ஆகியும்
மூதாட்டி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரைத் தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 7) காலை வாழை தோப்பில் மூதாட்டி சடலமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. உடனே உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். ஒரு கிராம் தங்க மூக்குத்திக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த கொலை சம்பவம் லாலாபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.