சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யான்சி (18) என்கிற இலங்கை தமிழ் பெண் சென்றுள்ளார். தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்ற அவர், அங்குள்ள பாரில் நடனம் ஆடியுள்ளார். அப்போது நடனமாடுவதில் இவர்களுக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதையடுத்து, பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து, யான்சி மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது, எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் சென்ற கார் மீது யான்சி தரப்பினர் கல் எறிந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களின் காரை வேகமாக ஓட்டிச் சென்று அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர். இதில் யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு 17 வயது சிறுமி படுகாயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவம் நடந்த தனியார் மதுபான பாரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்நிலையில், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாசினியின் தோழியான 17 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு கொலை வழக்கை கோயம்பேடு போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.