கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: நீதி கேட்டு திருச்சியில் மருத்துவர்கள் ஊர்வலம்…!
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த மருத்துவக் கல்லூரியை சூறையாடினர். மேலும், இந்த சம்பவத்தை கண்டித்தும், பயிற்சி மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டும், மருத்துவ ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மருத்துவப் பணிகளை புறக்கணித்து மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று(18-08-2024) திருச்சியில் மருத்துவர் சங்கத்தினர், நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நீதிமன்றம் நூழைவாயில் வரை சென்றனர். பின்னர் நுழைவாயில் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில், இந்திய மருத்துவர் சங்கத்தின் திருச்சி கிளைத் தலைவர் ஜி. சுரேந்திர பாபு, செயலாளர் ஜி. முகேஷ்மோகன், பொருளாளர் எம். தமிழ்ச்செல்வி, தேசிய துணைத்தலைவர் ஆர்.குணசேகரன், முன்னாள் துணைத்தலைவர் எம்.எஸ்.அஷ்ரப் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து மருத்துவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சூறையாடல் சம்பவத்தில் கொலைக்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடு நிலையான விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரியை சேதப்படுத்திய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரப்பணியில் அமர்த்தப்படும் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களிலிலும் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கூறினர்.
Comments are closed.