Rock Fort Times
Online News

திருச்சியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை…!

திருச்சி பீமநகர் ரெட்டித் தெருவைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்-நவமணி தம்பதியின் மகன் திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் படித்து வந்தார். நவமணி, மகனை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பள்ளி முடிந்ததும், நவமணி தனது இருசக்கர வாகனத்தில் மகனை வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். பீட்டர் சர்ச் பகுதியில் வந்தபோது, அங்கு நின்றிருந்த திருச்சி மாவட்டம் சமயபுரம் ஊரான்அடிகளார் வீதியைச் சேர்ந்த மு.கலையரசன் (27) என்பவர் நவமணியை வழிமறித்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துள்ளார். நவமணி எதிர்த்து போராட ஆத்திரமடைந்த கலையரசன், நவமணியை கடுமையாக தாக்கி சாலையில் தள்ளி சங்கிலியை பறித்துச்சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து கலையரசனை கைது செய்தனர். திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பெண்ணை தாக்கி, சங்கிலியை பறித்த குற்றத்துக்காக கலையரசனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ. 25,000 வழங்க வேண்டும் எனவும் நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில், அரசு தரப்பில் அப்போதைய காவல் ஆய்வாளராக இருந்த சரஸ்வதி, அரசு வழக்குரைஞர் ஹேமந்த் ஆகியோர் ஆஜராகினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்