தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை மீறி விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் முகமது என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார், அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அதேபோல, திருவாரூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு தலைமையில் காவல்துறையினர் நீடாமங்கலம் பரப்பன மேடு பகுதியில் வசிக்கும் முனியப்பன் (38) என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் ஊதுபத்தி பேப்பர் கப் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருவதாக கூறி அந்தப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்திலேயே புகையிலை பொருட்களையும் எடுத்துச் சென்று கடைகளுக்கு சப்ளை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக பரப்பனமேடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (40), நீடாமங்கலம் ஜோயல் (21) உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் 43 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல, 150 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 532 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.