வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் பிடிக்க முயன்ற போது பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிந்தது…!
கரூர் மாவட்டம், கருப்பத்தூரை அடுத்த கள்ளபள்ளி குடித்தெரு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சங்கர் (எ) வெட்டு, சங்கர்(32). இவர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ரவுடி பட்டியலில் உள்ள இவர், நேற்று வெள்ளிக்கிழமை தொட்டியம் அருகேயுள்ள காடுவெட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை மறித்து, அவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்த அரைபவுன் சங்கிலி, ரூ.1,300 ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றார். இதுகுறித்து சுப்பிரமணியன் காட்டுப்புத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தொட்டியம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காட்டுப்புத்தூர் போலீஸார் சீலைப்பிள்ளையார்புத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆணைக்கல்பட்டி உப்பாற்று பாலம் அருகில் போலீஸார் நிற்பதை பார்த்த வெட்டு சங்கர், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடினார். அவரை போலீசார் துரத்திச் சென்றனர். இதனால், பதற்றம் அடைந்த வெட்டு சங்கர் அங்குள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.இதில், அவருக்கு வலது காலில் எலும்பு முறிவும், இடது கையில் பலத்த காயமும் ஏற்பட்டது. பின்னர் போலீஸார், ரௌடி சங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.