Rock Fort Times
Online News

த.வெ.க. ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை…- ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை தவெக நிரூபிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து சாதனை படைத்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான(118 இடங்கள்) பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது காங்கிரஸ். அந்த கட்சி தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதன்மூலம் 113 பேரின் ஆதரவுடன் பொறுப்பு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது தவெக. இதுதொடர்பாக அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையிலான குழுவினர் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று சந்தித்தனர். மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஆனால், ஆட்சி அமைக்க வருமாறு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடவில்லை. மேலும், விஜய்க்கு அளிக்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான கான்வாய் வாகன பாதுகாப்பும் திடீரென காவல்துறையால் திரும்பப் பெறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக ஆளுநரை விஜய் தலைமையிலான நிர்வாகிகள் இன்று(மே 7) மீண்டும் சந்தித்தனர். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார். அந்தச் சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க தேவையான அந்த பெரும்பான்மையை விஜய் நிரூபிக்கவில்லை என்று எடுத்துரைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பு குறித்து தவெக தரப்பில் இன்னும் மவுனம் கலைக்கப்படாத நிலையில், ஆளுநர் தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்திய பிறகே, ஆட்சி அமைக்க உரிமை கோரி அளித்த கடிதத்தை பரிசீலிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், மாநிலத்தில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்பதையே ஆளுநர் விரும்புகிறார். பெரும்பான்மை பலம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, விஜய் பதவியேற்கலாம்.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்