Rock Fort Times
Online News

விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் திடீர் வாபஸ்: காரணம் என்ன?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளை விட, புதிதாக தேர்தலில் களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய்க்கும், அவரது இல்லத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், அன்று இரவே அவருக்கு முதலமைச்சருக்கு வழங்கக்கூடிய காவல்துறை கான்வாய் வாகனங்களும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அனைத்து இடங்களுக்கும் கான்வாய் வாகனங்களின் பாதுகாப்புடனேயே விஜய் சென்று வந்தார். இந்நிலையில், நேற்று (மே 6) ஆளுநர் மாளிகைக்கு சென்றுவிட்டு பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தங்கியிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தனிப்பெரும் கட்சியாக மட்டுமே உருவெடுத்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சூழலில்தான், விஜய்யின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த கான்வாய் வாகனங்கள் திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் அனைத்தும், ஆர்.ஏ. புரத்தில் உள்ள காவல்துறையின் செக்யூரிட்டி பிரான்ச் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கான்வாய் வாகனங்கள் சென்றபிறகு, சிறிது நேரம் கழித்து விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு தனியாக காரில் புறப்பட்டுச் சென்றார். கான்வாய் வாகனங்கள் திரும்ப பெறப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், விஜய்யே தானாக முன்வந்து தனக்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாகவும், பெரும்பான்மை பெற்று முதலமைச்சராக பதவியேற்றதும் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
முன்னதாக, ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாததால் கான்வாய் பாதுகாப்பு குறித்து பிரச்சினைகள் எழக்கூடும் என காவல்துறை அதிகாரிகள் விஜய்யிடம் கூறியதாகவும் ஒருபுறம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்