இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதற்கான மறு தேர்வு நாளை( ஜூன்21) நடைபெற உள்ளது. இதற்காக வினா தாள்கள் முதல்முறையாக ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் கொண்டு செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை எழுத மாணவர்கள் தயாராகி வரும் நிலையில் நாக்பூரைச் சேர்ந்த தேர்வருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து அப்துல்லா முகமது தலிப் என்பவர் தனது ரீ-நிட் 2026 தேர்வு அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்துள்ளார். இந்நிலையில் தேர்வு முகமையால் வழங்கப்பட்ட அனுமதி அட்டையில் ஏற்பட்ட பிழை காரணமாக, நாக்பூரைச் சேர்ந்த இவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவர் தனது அனுமதி அட்டையின் ஸ்கிரீன்ஷாட்டை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில் தேர்வு மையம் அபுதாபியில் உள்ள ஒரு இந்தியப் பள்ளி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் NTA அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் என்டிஏ அந்தத் தவறை ஏற்று, அது ஒரு தொழில்நுட்பக் கோளாறின் விளைவாக ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருத்தப்பட்ட அனுமதி அட்டை வழங்கப்படும் என்றும் அந்த முகமை, தேர்வரின் குடும்பத்தினருக்கு உறுதியளித்தது. இத்துடன் இன்று மாலைக்குள் பிழை சரிசெய்யப்பட்டு விடும் என்று என்டிஏ-விடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதாகத் தேர்வரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Comments are closed.