காவிரி-பொன்னணியாறு இணைப்புத்திட்ட கோரிக்கை…* மணப்பாறை த.வெ.க. எம்.எல்.ஏ கதிரவனின் உருட்டும்-புரட்டும்..!
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி அருகே, முகவனுார் கிராமத்தை ஒட்டி, செம்மலை, பெருமாள் மலைக்கும் இடையே பொன்னணி ஆறு அணைக்கட்டு அமைந்துள்ளது. இது, 51 அடி உயரம், 247 மீட்டர் நீளத்தில் 1974ல் அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் நீர்ப்பிடிப்பு பகுதி, கரூர் மாவட்டத்திலும், பாசனப் பகுதிகள் திருச்சி மாவட்டத்திலும் உள்ளன. தற்போது, இந்த அணை மூலம், 2,300 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அணையில், 20 அடி ஆழத்திற்கு சகதி தேங்கியுள்ளதால், தண்ணீர் தேக்கம் குறைந்து விட்டது. இரண்டு மாவட்ட நிர்வாகங்களும், சகதியை அகற்றி, துார் வாரி, பாசன நிலப்பரப்பை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொன்னணியாறு அணைக்கட்டுக்கு, கரூர் மாவட்டம், மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால், பாசனப்பரப்பு அதிகரிக்கும். காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, மாயனுார் கதவணையில் இருந்து உபரி நீரை, பொன்னணியாறு அணைக்கு, குழாய் மூலம் நீரேற்றும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்ட மக்களும், விவசாயிகளும் ஏற்கெனவே கடந்த திமுக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த திமுக அரசு இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பொதுப்பணித்துறை மூலம் ரூ.83 லட்சத்தில் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பெரும் செலவு கொண்ட இத்திட்டத்தை மாநில அரசு மட்டும் செய்ய முடியாது என்பதால், மத்திய அரசின் உதவியை நாட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் திமுக மாநிலங்களவை உறுப்பினரான கவிஞர் சல்மா, மத்திய நீர்மேலாண்மைத் துறை அமைச்சரான சி.ஆர்.பட்டேலை சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியுதவி வழங்கிட வலியுறுத்தியுள்ளார்.ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் பொன்னணி ஆறு காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை மற்றும் மத்திய அமைச்சரை சந்தித்து நிதியுதவி ஆகிய முன்னேற்பாடுகளை செய்த நிலையில், தற்போது மணப்பாறை தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏவாக இருக்கும் கதிரவன், பொன்னணி ஆறு காவிரி உபரி நீர் திட்டத்திற்கு இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தான்தான் அதுகுறித்து கோரிக்கை வைத்திருப்பது போன்றும் தோற்றத்தை உருவாக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை ரெடி செய்து அதை கட்சியினரால் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாக்கி வருகிறார். தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்படும் அந்த போஸ்டரில் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார் என்று தான் இருக்கிறதே தவிர யாரை எந்த நேரத்தில் சந்தித்து எப்போது கோரிக்கை வைத்தார் என்பது போன்ற எந்த விபரங்களும் இல்லை. விவசாயிகளின் வாழ்வாதார திட்டமாக கருதப்படும் இந்த பொன்னணி ஆறு காவிரி உபரி நீர் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்து மணப்பாறை த.வெ.க. எம்எல்ஏ கதிரவன் செய்யும் இந்த சுய விளம்பரம் தொகுதி விவசாயிகள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.