திருச்சி மாவட்ட கலெக்டராக பிரதீக் தயாள் பதவி வகித்து வருகிறார். இவருக்கு முன்பு கலெக்டராக இருந்த வி.சரவணன் தர்மபுரி மாவட்டத்திற்கு அரசால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பின், தமிழக அரசின் நிதித்துறை இணை செயலாளராக இருந்த பிரதீக் தயாள் திருச்சி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். மே 31ம் தேதி கலெக்டராக பொறுப்பேற்ற இவர் தற்போது அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அறையில் டீசர்ட்- ட்ராக் பேண்ட் அணிந்த வட மாநில இளைஞர் ஒருவர் நுழைந்து கலெக்டருக்கான இருக்கையில் கால் மேல் கால் இட்டு அமர்ந்தபடி இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் நாம் கேட்டபோது., திருச்சி காஜாமலையில் உள்ள மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வேலையில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் தவறுதலாக கலெக்டரின் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விட்டார். இதுதொடர்பாக அவர்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அரசாங்க முத்திரையோ, கடிதம் வெளியிடப்பட்ட தேதி என்று எதுவும் குறிப்பிடப்படாமல் டைப் செய்து பிரிண்ட் எடுத்தது போல கடிதம் உள்ளது. பொய்யையே உண்மையாக்கும் ஏ.ஐ உலகத்தில் அரசு சார்பில் வெறுமனே அனுப்பப்பட்ட விளக்கக்கடிதமும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

Comments are closed.