இனி கள்ளச்சாராயம் காய்ச்ச, விற்க அனுமதிக்க மாட்டோம்- திருச்சி கலெக்டர், எஸ்.பி. தலைமையில் பொதுமக்கள் உறுதிமொழி…!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டம் தோறும் மாவட்ட கலெக்டர், எஸ்பி தலைமையில் கள்ளச்சாராய விற்பனை கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் நேற்று இரவு பச்சைமலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓரிடத்தில் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், அங்கு யாரும் இல்லை. பின்னர் அங்கிருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாராயத்தின் தீமைகளை எடுத்து கூறியதை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.தலைமையில் மதுபோதைக்கு எதிராக, “இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சவோ, விற்கவோ அனுமதிக்க மாட்டோம்” என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக 3 கிலோமீட்டர் தூரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், எஸ்.பி வருண்குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று சாராய ஊறலை அழித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Comments are closed.