Rock Fort Times
Online News

திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா…போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு!

திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியின் 21-வது ஆண்டு விளையாட்டு விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைமை சுங்க ஆணையர் ஸ்ரீ பாரத் பிரகாஷ் சிறப்பு விருந்தினராகவும், பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸ்-ல் பூப்பந்து விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் கௌரவ விருந்தினராகவும் பங்கு பெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். அதிக புள்ளிகளை பெற்று மாண்ட்போர்ட் அணி முதலிடத்தையும், பாஸ்கோ அணி இரண்டாம் இடத்தையும் வென்றன. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் ஸ்ரீ பாரத் பிரகாஷ் பேசுகையில், தற்போது மாணவ, மாணவிகள் தங்களது உடல் பாதுகாப்பை மறந்து செயற்கை உணவுகளையும், சுவையூட்டிகள் நிறைந்த உணவுகளையும் தான் அதிகம் விரும்புகின்றனர். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கேற்ப உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதற்கு எளிய உடற்பயிற்சிகளையும், இயற்கையில் விளையக்கூடிய காய்கறிகளையும் உண்ண வேண்டும். மாணவச் செல்வங்கள் கைபேசியில் விளையாடுவதை தவிர்த்து மைதானத்தில் விளையாடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கௌரவ விருந்தினர் துளசிமதி முருகேசன் பேசுகையில், தற்போது நம் அரசு விளையாட்டு வீரர்களுக்காக தனி இடஒதுக்கீடு தந்து அவர்களின் படிப்பிற்கும், வேலைவாய்ப்பிற்கும் முன்னுரிமை அளிக்கிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இறுதியாக பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் பேசுகையில், இந்த விழா சிறப்பாக நடைபெற உறுதுணை புரிந்த துணைமுதல்வர் சகோ.ஜான்பால், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், இருபால் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவச் செல்வங்கள், பெற்றோர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்