Rock Fort Times
Online News

10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 120 லட்சம் கோடி வழங்கியுள்ளோம்- பிரதமர் மோடி…

திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில், தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  கனமழை காரணமாக கடந்த சில வாரங்கள் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. வரக்கூடிய ஆண்டுகளில் நாம் மிகவும் வளர்ச்சியான நாடாக மாற்ற வேண்டும். பாரத நாட்டின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழகத்திற்கு வரும் போது எல்லாம் ஒரு புதிய சக்தியை நான் நிரப்பி செல்கிறேன். திருச்சி நகரம் என்றாலே வளமான வரலாற்று சான்றுகள் உள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் இங்கு ஆட்சி செய்துள்ளனர். தமிழ் கலாச்சாரம் குறித்து நண்பர்களிடம் கற்றுக் கொண்டுள்ளேன். உலகில் எங்கு சென்றாலும் தமிழகத்தை பற்றி தமிழ் மொழியை பற்றி நான் பேசாமல் வர மாட்டேன். டெல்லி செங்கோட்டையில் செங்கோல் நிறுவப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்பை நாடு பெற்றுள்ளது. கட்டுமானம் மற்றும் சமூம கட்டமைப்பில் இதுவரை இல்லாத அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. பெரிய முதலீட்டாளர்கள் எல்லாம் நம் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு மேக் இன் இந்தியா திட்டத்தில் பிராண்ட் அம்பாசிட்டராக மாறி கொண்டுள்ளது. மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்பதை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறோம். தமிழகம் விரைவான வளர்ச்சி பெறும் போது கண்டிப்பாக நாடும் வளர்ச்சி அடையும். திருச்சியில் விமான இணைப்பின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு செல்ல முடியும். புதிய வணிகம் போன்ற பல சிறப்புகள் கிடைக்கும். தமிழகத்தில் ரயில் இணைப்புகளுக்கு மேலும் வலு சேர்க்க 5 புதிய திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், சிதம்பரம், வேலூர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா இடங்களை அனைவரும் வந்து பார்க்க இந்த புதிய ரயில் சேவைகள் உதவும். கடற்கரை கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக மீன் வளத்துறைக்கு தனித்துறையை உருவாக்கினோம். கொள்திறனை நாம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளோம். இதன் வாயிலாக ஏற்றுமதி இறக்குமதிக்கு புதிய சக்தி கிடைக்க வழிவகை செய்துள்ளோம். கான்கிரீட் வீடுகள், கழிப்பிடம் மற்றும் கேஸ் இணைப்புகளை வழங்கி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 120 லட்சம் கோடி தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய மந்திரிகள் எல்.முருகன்,  ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, டி.ஆர்.பி. ராஜா, திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்  மற்றும் பலர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்