திருச்சி விமான நிலைய புதிய முனையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்…
முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், 951 கோடி ரூபாயில் புதிய முனையம் அமைக்கும் பணியை கடந்த 2019-ஆண்டு பிப். 10-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். விமான நிலைய ஆணையக் குழுமம், 2021ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்துக்குள் பணிகளை முடித்து, புதிய முனையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணிகள் முற்றுப்பெறாத நிலையில் திறப்பு விழா நடத்தப்படவில்லை. அதனால், 249 கோடி ரூபாய் வரை கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டு, அதிகமான பணியாளர்களை கொண்டு, கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக பணிகள் நடைபெற்றது. தற்போது, புதிய முனையம் 60 ஆயிரத்து 723 ச.மீ. பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 4,000 பன்னாட்டு பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாளக்கூடிய வகையில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியேற்றப்பிரிவினருக்கான 40 செக் அவுட் மற்றும் 48 செக் கவுன்ட்டர்கள், விமானங்கள் நிறுத்த 10 ஏப்ரான்கள் மற்றும் ஏரோ பிரிட்ஜ் (விமானத்தில் இருந்து முனையத்தில் நுழையும் பகுதி), 26 இடங்களில் லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), சுங்கத் துறையினருக்கென 3 சோதனை மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 இடங்களில் வி.ஐ.பி., காத்திருப்பு அறைகளும் இந்த புதிய முனையத்தில் உள்ளன. இதுதவிர, விமான நிலைய வளாகத்தில் 1,000 கார்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் நாகரிகம், கலாசாரம், பண்பாடுகளை பறைசாற்றும் விதமாக வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. வருகை, புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் மேற்கூரையுடன் அமைந்த புதிய முனையத்தில், 75 கோடி ரூபாய் செலவில் 42.5 மீ உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த புதிய முனையத்தை இன்று (2-01-2024) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும், இந்த விழாவில் ரூ 20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய மந்திரிகள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, டி.ஆர்.பி. ராஜா, திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் மற்றும் பலர் பங்கேற்றனர்.முன்னதாக இன்று காலை 10 மணிக்கு, விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 10-30 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பிரதமர் மோடி மற்றும் முக்கிய விஐபிகள் வருகையை முன்னிட்டு திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை, 8,000 போலீசாரும், திருச்சி விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் திருச்சி வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பிரதமர் வருகையை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.