துறையூர் பச்சைமலைக்கு சாலை, பேருந்து வசதியின்றி கிராம மக்கள் அவதி- அவசர சிகிச்சைக்கு 10 கி.மீ. சுற்றிச்செல்லும் அவலம்…!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை வண்ணாடு, கோம்பை, தென்புற நாடு என 3 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இதில் கோம்பை ஊராட்சியில் எருமைப்பட்டி, குண்டூர், ஏரிக்காடு மருதை ஆகிய பகுதிகளில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி இல்லாததால் இங்குள்ள மக்கள் குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
அவசர மருத்துவ சிகிச்சைக்கு 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்கிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை முழுமூச்சாக கொண்டுள்ளனர். தங்கள் வயல்களில் விளையும் மா, பலா, முந்திரி, மிளகு ஆகிய விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து செம்புளிச்சாம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்று அங்கிருந்து பஸ் பிடித்து துறையூர் நகர பகுதிக்கு கொண்டு சென்று விற்று வருகின்றனர். இந்த கிராமப் பகுதிகளுக்கு சாலை வசதி மற்றும் பஸ் வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், தாங்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு நகரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து நடந்து சென்று 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்புலிச்சம்பட்டி கிராமத்தை அடைந்து அங்கு காலை 6 மணிக்கு புறப்படும் நகரப் பேருந்தில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டும் என்றால் மாலை 5 மணி ஆகும். மேலும் அங்கிருந்து நடந்து தங்கள் வீட்டை அடைவதற்கு இரவு 7 மணி ஆகும். பிரசவ நேரத்தில் , கர்ப்பிணி பெண்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்கு போன் செய்தால் சாலையை காரணம் காட்டி வர மறுத்து விடுகிறார்கள். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களை தூழி கட்டி 10 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டு செல்ல வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர். ஆகவே, எங்கள் பகுதிக்கு சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
Comments are closed.