லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மிகப் பெரிய இரட்டை நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதில் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நிலை குலைந்துள்ளன. 39 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகளால் கரீபியன் தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அதிகாரபூர்வ உயிரிழப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்த இயற்கைப் பேரிடரால் 10,000 முதல் 1 லட்சம் வரை உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.
தலைநகர் கராகஸ் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்ததால், ஒட்டுமொத்த நகரமும் தூசு மண்டலமாக மாறியுள்ளது. வீதிகளில் மக்கள் அலறியடித்தபடி ஓடியதாகவும், இடிபாடுகளுக்குள் தங்களின் உறவினர்களை தேடி மக்கள் தவிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரின் முக்கிய பகுதிகளில் மீட்பு குழுவினர், தன்னார்வலர்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றி உயிருக்குப் போராடுபவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.