Rock Fort Times
Online News

மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக புகார்: அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

மதுரை மேலூர் தொகுதியின் எம்எல்ஏவும், தமிழகஉயர் கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யாநடராஜன் என்பவர், தமிழக டிஜிபி, சிங்கப்பெண் படை அதிகாரி, தமிழக சைபர் க்ரைம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ​அந்தப் புகார் மனுவில், மதுரை மேலூரில் ஜுன் 21-ம் தேதி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகளும், இளம் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் விஸ்வநாதன், அங்கு வந்திருந்த சிறுமிகளுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களின் அனுமதி இன்றி அநாகரிகமான முறையில் உடலின் பல்வேறு பகுதிகளில் தொட்டுள்ளார். இது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கும் செயலாகும். ஆகவே, அமைச்சர் மற்றும் இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் விளக்கம்,

இந்த சர்ச்சைக்கு அமைச்சர் விஸ்வநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று 4 கி.மீ. தூரம் சென்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்பிரச்சினையில் எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்கிற நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்