திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள ஜம்புநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். இந்த கோர சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால், இக்கோர விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காக்கத் தவறிய முசிறி அரசு மருத்துவமனையின் செயல்பாடு பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம், சாலை விபத்தில் பலியான 8 பேர்களின் உடல், முசிறி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய வசதி இல்லாமல், திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிருக்கு போராடிய இருவர், இங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உயிரும் தற்போது ஊசலாடி கொண்டிருக்கிறது. உயிர்காத்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டிய முசிறி அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ உபகரணங்களும், இட வசதியும் இல்லாதது தற்போது இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாம் விசாரித்தோம். அப்போது நமக்கு தெரிய கிடைத்த தகவலானது.,
“திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து பயன்படுத்துவதற்கே ஆபத்தான நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனையின் முன்புறம் கட்டப்பட்டுள்ள இரண்டு பில்டிங்குகளில் தான் பெரும்பாலான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் இடதுபுறமுள்ள பில்டிங் முழுவதும் பிரசவத்திற்காகவும், வலதுபுறமுள்ள பில்டிங்கில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எமர்ஜென்சி வார்டும் பெயரளவில் தான் செயல்படுகிறது. இங்கு ஒரே நேரத்தில் 4 பேர் தான் சிகிச்சை பெற முடியும். எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே வசதியும் இல்லை. முதல் மாடி முழுக்க அறுவை சிகிச்சை அரங்குகள் மட்டுமே இருக்கிறது. ஒரு நாளைக்கு முசிறி, தொட்டியம், தா.பேட்டை காட்டுப்புத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 600க்கும் அதிகமானவர்கள் புறநோயாளிகளாக இங்கு சிகிச்சை பெற வருகிறார்கள். அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆனால், ஒரே நேரத்தில் பத்து பேரைக்கூட இம்மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாது. அந்த அளவிற்கு எந்தவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இந்த மருத்துவமனையில் இல்லை. சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் “கோல்டன் ஹவர்ஸ்” என்கிற குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும். அது போன்ற எந்தவிதமான மருத்துவ உபகரணங்களும் இங்கு இல்லை. மருத்துவர்கள் பற்றாக்குறையும் தலை விரித்தாடுகிறது. போதிய நர்ஸ்களும் பணியில் இருப்பதில்லை. இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகளால் பிரசவத்திற்காக முசிறி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யவே பலர் பயப்படுகின்றனர். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முசிறி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து இத்தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.வான எம்.விக்னேஷ சட்டமன்றத்தில் விரிவாக பேசியிருந்தார். அதற்கு பிறகாவது அரசு நிர்வாகம் சுதாரித்திருந்தால் அவசர காலத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தியிருக்க முடியும். அப்படி செய்திருந்தால் முசிறியிலிருந்து அவசர சிகிச்சைக்காக திருச்சிக்கு 2 பேர் கொண்டு செல்லப்பட வேண்டிய அவசியம் இல்லை. இனி வரும் காலங்களிலாவது இதுபோன்ற உயிர் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க முசிறியை தலைமை இடமாகக் கொண்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை உருவாக்கி சுற்றுவட்டார பகுதி மக்களின் உயிர்காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Comments are closed.