Rock Fort Times
Online News

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா: கொடி ஏற்றத்துடன் இன்று தொடங்குகிறது…!

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாதாவை தரிசித்துச் செல்கின்றனர்.
இந்த பேராலயத்தில் மாதாவின் பிறப்பு விழா ஆண்டுதோறும் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு திருவிழா இன்று(29-08-2024) மாலை 6 மணி அளவில் மாதாவின் கொடி ஏற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து திருத்தல கலை அரங்கத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 30-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆலயத்தின் கீழ் கோவில், விண்மீன் ஆலயங்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு, சிலுவைப்பாதை, திருத்தேர் பவனி போன்றவை நடக்கின்றன.  7-ம் தேதி திருத்தல கலை அரங்கில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், சிறப்பு திருப்பலி ஆகியவை நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து இரவு 7-30 மணி அளவில் மாதாவின் பெரிய தேர் பவனி நடக்கிறது.  8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்னையின் பிறப்பு பெருவிழா கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து, தங்குமிடம், தண்ணீர் வசதி என அனைத்து வசதிகளும் பேராலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்