திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது மரத்தில் வேன் மோதல்: 6 பேர் பலி, 16 பேர் படுகாயம்…!
ராணிப்பேட்டை மாவட்டத்தை அடுத்துள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்த வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். விபத்தை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.